மதுரை: ராஜீவ்கொலை வழக்கு கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு அதிமுக அரசு இந்த நடவடிக்கையை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 1991-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருந்த ராஜீவ்காந்தி விடுதலைப்புலிகளின் தற்கொலை படையினரால் கொல்லப்பட்ட நிலையில், இந்த படுகொலை தொடர்பாக சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், கருணை அடிப்படையில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இவர்கள் 7 பேரும் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள நிலையில், அவர்களை விடுக்க வலியுறுத்தி கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்தியஅரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், மத்திய அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு, குற்றவாளிகளை விடுவிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர்களை விடுவிக்க மத்தியஅரசு மறுத்து வருகிறது. அதுபோல காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழகஅரசு அனுப்பிய கோப்புக்கு ஆளுநரும் ஒப்புதல் வழங்க மறுத்து வருகிறார்
இதற்கிடையில், குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன், தன்னை விடுவிக்க வேண்டும் என ஆளுநருக்கு கருணை மனு அனுப்பியிருந்தார். அதுவும் கிடப்பில் போடப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தது.
தற்போது தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ள நிலையில், இந்த விவகாரமும் தற்போது அரசியலாக்கப்பட்டு உள்ளது. ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல கட்சிகள் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
மேலும், மருத்துவப்படிப்பு உள்ஒதுக்கீடு விவகாரத்தில், ஆளுநரின் ஒப்புதலை வழங்க தாமதப்படுத்தியதால், ஆளுநரின் அதிகாரத்தை மீறி, தமிழகஅரசு அதிரடியாக அரசாணை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுபோல, ராஜீவ்கொலை கைதிகள் விவகாரத்தில், தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்வது பற்றி முதல்வர் முடிவை அறிவிப்பார். 7.5 சதவீத உள்ஒதுக்கீடு போலவே 7 பேர் விடுதலையிலும் முதல்வர் முடிவை அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களிடையே வாக்குகளை பெறும் நோக்கில் தமிழகஅரசு, ராஜீவ்கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய முன்வரலாம் என்று தகவல்களும் பரவி வருகின்றன.