சபரிமலை
சபரிமலை தரிசனத்துக்கான முன் பதிவு இரண்டே தினங்களில் முடிவடைந்ததால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
வரும் நவம்பர் 15 ஆம் தேதி அறு சபரிமலை கோவில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக திறக்கப்பட உள்ளது. நவம்பர் 16 ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு முன்பதிவு செய்யும் பக்தர்கள் கடுமையான சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட உள்ளனர். அத்துடன் ஒவ்வொரு பக்தரும் தரிசன தேதிக்கு 48 மணி நேரம் முன்னர் கொரோனா பாதிப்பு இல்லை எனச் சான்றிதழ் பெற வேண்டும். தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 10 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
வார நாட்களில் தினசரி 1000 பக்தர்களும் சனி மற்றும் ஞாயிறு அன்று 2000 பக்தர்களும் சிறப்புப் பூஜை தினங்களில் 5000 பக்தர்களுக்கும் அனுமதி வழங்க உத்தேசிக்கப்பட்டது. எனவே இதற்கு முன்பதிவு செய்ய பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
கடந்த ஞாயிறு அன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்த 60 நாட்களுக்கான முன் பதிவு இரண்டே தினங்களில் முடிவடைந்துள்ளதாகக் கேரள காவல்துறை அறிவித்துள்ளது. முன்பதிவு செய்யக் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த அறிவிப்பால் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.