ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் கோவில் நகைகள் எடை குறைந்ததாக வந்த செய்தி குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 1978 ஆம் வருடம் ராமேஸ்வரம் கோவிலில் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. அதன் பிறகு மீண்டும் 40 வருடம் கழித்துச் சென்ற வருடம் ஜனவரி 29 முதல் மார்ச் 7 வரை மறு மதிப்பீடு செய்யப்பட்டது.   இந்த மறு மதிப்பீடு அறிக்கை கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மறு மதிப்பீட்டு அறிக்கையின் படி பல நகைகள் மற்றும் பொருட்களில் எடைக் குறைவு கண்டறியப்பட்டது.  இது குறித்து கோயில் குருக்கள் உள்ளிட்டோருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.  இதையொட்டி சமூக வலைத் தளங்களில் கடும் சர்ச்சை உண்டானது. இந்நிலையில் கோவில் நிர்வாகம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “சிவகங்கை துணை ஆணையர் தலைமையில் நடந்த மறு மதிப்பீட்டில் தற்போது 18 பொன் இனங்களில் சுமார் 68 கிராம் எடை குறைவுக்கான தொகை ரூ.2,11,790 எனவும் பழுதுகளால் இழப்பு ரூ. 2454 எனவும் மொத்தம் ரூ.2,14,424 இழப்பு என கண்க்கிடபட்டுள்ளது.

மேலும் வெள்ளி இனங்களின் இடை குறைப்புக்கான தொகை ரூ.10,93,340 எனவும் தங்க முலாம் பூசிய வெள்ளி இனங்களின் இடை இழப்புக்கான மதிப்பு ரூ. 1,36,670 எனவும் கணக்கிடப்பட்டு மொத்த இழப்பு ரூ. 12,29,010 எனத் தெரிவிக்கப்பட்டது.  அதே வேளையில் அனைத்து இனங்களும் எண்ணிக்கையில் சரியாக உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே 40 ஆண்டு இடைவெளியில் இந்த நகைகள் மற்றும் பொருட்கள் ஆகியவை தேய்மானம் காரணமாக எடைக் குறைப்பு ஏற்பட்டிருக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த 40 ஆண்டு காலத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் 13 பேர், விருப்ப ஓய்வு பெற்ற 2 பேர்,  பணியில் உள்ள 32 பேர் என 47 பேருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டிசில் எடை குறைவுக்கான தொகையை தங்களிடம் இருந்து ஏன் வசூலிக்கக் கூடாது என விளக்கம் கோரப்பட்டது.  இது கோவில் நிர்வாகத்தில் வழக்கமான ஒரு நடைமுறையாகும்.  பணியாளர்கள் முறைகேடு செய்ததாக நோட்டிசில் குறிப்பிடவில்லை.   எனவே மக்கள் யாரும் எவ்வித கவலையும் கொள்ள வேண்டாம்” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.