நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதங்களை அதிகரிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அந்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 63 திருத்தங்கள் கடந்தஆண்டு (2019) செப்டம்பர் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தன. விபத்துகளைக் குறைப்பதற்கும் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதைத் தடுக்கும் நோக்கிலும் இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதன்படி, போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான பொதுவான அபராதத் தொகை ரூ.100லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஹெல்மெட் இல்லாமல் வாகனங்களை இயக்கினால் இதுவரை ரூ.100 அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அந்தத் தொகை தற்போது ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டதுடன் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்கள் வரை தகுதியிழப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அபராத தொகை அதிகம் என்பதால், சர்ச்சை எழுந்தது. இதையடுத்து சில மாநிலங்களில் அபராதம் தொகை குறைக்கப்பட்டது. தமிழகத்தில் புதிய அபராதத் தொகை அமல்படுத்தப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் நாளை முதல் சிக்னல் நிறுத்தங்களில் வெள்ளை நிற ஸ்டாப்லைன் (stop) கோடுகளை தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறையை போக்குவரத்து போலீசார் தீவிரமாக அமல்படுத்த உள்ளனர்.