சென்னை: கொரோனா நடவடிக்கையாக மூடப்பட்ட கோயம்பேடு பழங்கள் மொத்த வியாபாரச் சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால், பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது.
தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்து. இங்கு பணி செய்தவர்கள் மற்றும் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வந்தவர்கள் மூலம் சென்னை உள்பட அண்டை மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிகரித்தது. இதையடுத்து கோயம்பேடு சந்தை முழுவதுமாக மூடப்பட்டது. பல்வேறு நகரங்களுக்கு சந்தை மாற்றப்பட்டது. தற்போது தொற்று குறைந்து வருவதால் கோயம்பேடு சந்தை படிப்படியாக திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
முதல் கட்டமாக கடந்த செப்டம்பர் 18ந்தேதி பலசரக்கு மொத்த விலைக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டதுடன், செப்டம்பர் 28ந்தேதி முதல், காய்கறி மொத்த வியாபாரிகள் 200 பேருக்கு மட்டுமேஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் கடையை திறக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், சிறு மொத்த விற்பனையில் ஈடுபடும் 1,700 காய்கறிவியாபாரிகள், 800 பழ வியாபாரிகள் தொழில் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து கடைகளை திறக்க அனுமதி கோரி கோயம்பேடு சந்தை சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் தலைமையில் கோயம்பேடு பழச்சந்தை வளாகத்தில் வியாபாரிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர். இதையடுத்து, நவம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, கோயம்பேடு சந்தையில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி வழங்கியது.
இதையடுத்து கோயம்பேடு சந்தையில், பழ அங்காடியை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் தலைமை திட்ட வடிவமைப்பாளர் பெரியசாமி மற்றும் அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து, சரக்கு வாகனங்கள் மூலம் பழங்கள் அனுமதிக்கப்பட்டன. வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஓட்டுநர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. கொரோனா நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.
சந்தைக்குள் பயணிகள் ஆட்டோ மற்றும் பைக்குகள் செல்ல அனுமதி இல்லை. சில்லறை வியாபாரமும், தனி நபர் கொள்முதலும் செய்ய அனுமதியில்லை என அறிவித்துள்ளது. கோய்ம்பேடு சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 7 மணி முதல் காலை 5 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.