பெய்ஜிங்: நாடு தழுவிய மக்கள்தொகை கணக்கெடுப்பை துவங்கியது சீனா. இந்தக் கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும்.
உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாட்டின் மக்கள்தொகை மாற்றங்களை ஆவணப்படுத்துவதற்காக இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இப்பணியில் மொத்தம் 70 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று கணக்கெடுப்பை மேற்கொள்வார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் சீன மக்கள்தொகை 137 கோடி பேர் என்று அறியப்பட்டது.
இந்தக் கணக்கெடுப்பில் பெயர், ஐடி எண், பாலினம், திருமணத் தகவல், கல்வி மற்றும் தொழில் உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்படும். அந்நாட்டிலுள்ள வயதானவர்களின் விபரங்கள் குறித்து அறியவே, இந்தக் கணக்கெடுப்பு பிரதானமாய் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சீனாவின் 60 வயதிற்கு மேற்பட்ட வயதானோர் மக்கள்தொகை கடந்த மார்ச்சில் 420 மில்லியனாக அதிகரித்ததாகவும், 6 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 100 மில்லியனாக கூடியது எனவும் தெரிவித்த அந்நாட்டு பிரதமர் லீ கெக்யாங், நாட்டில் நர்சிங் சேவைகள் மற்றும் குழந்தைகளுக்கான தின பராமரிப்பு மைய சேவைகளை வழங்குவது சவாலான ஒன்றாய் திகழ்வதாக கூறினார்.