மதுரை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செய்ய சென்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகே பிறந்த முத்துராமலிங்க தேவர் அவர்களின் 113வது பிறந்த நாளும், அவரது இறந்த நாளும், ஜெயந்தி மற்றும் குருபூஜையாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு குரு பூஜை வழக்கமாக நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சியினர், அவரது சமூகத்தினர் மரியாதை செய்வது வழக்கம்.
அதன்படி, பசும்பொன் செல்வதற்காக திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு நேரில் சென்று மாலை அணிவித்து முக ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தியுள்ளார்.