மும்பை: மும்பை நகரில் 30 நாட்களுக்கு டிரோன்கள், குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி போன்ற பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. அதே நேரத்தில் மும்பை தாக்குதல் நினைவு தினமும் அனுசரிக்கப்பட உள்ளது. ஆகையால் மும்பை நகரத்தில் போலீசார் தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர்.
அதன்படி நகரில் டிரோன்கள், ரிமோட் உதவியுடன் இயக்கப்படும் குட்டி விமானங்களை பறக்க விட தடை விதித்துள்ளனர். டிரோன்கள், குட்டி விமானங்கள் தீவிரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்பதால் இந்த தடையை விதித்து உள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.
இது குறித்து போலீசார் மேலும் தெரிவித்துள்ளாவது: இந்த தடை அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை 30 நாட்கள் அமலில் இருக்கும். 144 தடை உத்தரவின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினர்.