சென்னை: கொரோனா பொதுமுடக்கத்தை மத்தியஅரசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் நவம்பர் 30ந்தேதி வரை நீட்டித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதையடுத்து, தியேட்டர்கள், பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதால், பல்வேறு கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அனைத்தும் செயல்பட தொடங்கிய நிலையில், மக்களின் இயல்புவாழ்க்கையும் திரும்பி உள்ளது. இருந்தாலும், முகக்கவசம், தனிமனித இடை வெளியை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
பல மாநிலங்களில் தியேட்டர்கள் உள்பட பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் தியேட்டர்கள், மெரினா கடற்கரை, நீச்சல்குளம் போன்றவை இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.
இந்த நிலையில், வழக்கமாக ஒவ்வொரு முறை ஊரடங்கு முடியும் முன்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்வதை போன்று இன்றும் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக்குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி வழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
அதைத் தொடர்ந்து, மதியம் 2.30 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவினருடனும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில், நவம்பர் மாதம் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்தும், பல்வேறு புதிய தளர்வுகளை வழங்குவது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்யப்பட இருக்கிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகே தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தியேட்டர்களை திறக்க தியேட்டர்கள் ஓனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று தியேட்டர்கள் திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும், பள்ளிக் கல்லூரிகள் திறப்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.