மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி செய்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையின் அடைக்கப்பட்ட பின்னர் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள சாத்தான்குளம், கோவில்பட்டி சென்று விசாரணை நடத்தினர். இந் நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தந்தை,மகன் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது தொடர்பாக சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவலர்கள் மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டதால் உயிரிழந்தனர். காவல் நிலையத்தின் கழிப்பறை, சுவர்கள், லத்தி, மேஜைகள் என பல்வேறு இடங்களில் கிடைத்த ரத்தமாதிரிகள் உயிரிழந்த 2 பேரின் டிஎன்ஏ உடன் ஒத்துப்போவது தெரியவந்துள்ளது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் ரத்தம் படிந்த துணிகளை தூய்மைப்படுத்தி தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி செய்துள்ளனர் என்று கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.