சென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்து உலகம் முழுவதும் தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல் கட்ட ஆராய்ச்சி நிறைவடைந்தது. 2ம் கட்டமாக மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் 17 மையங்களில் 1,600 பேருக்கு இந்த தடுப்புமருந்து பரிசோதனை நடைபெறுகிறது. தமிழகத்தில் கோவிஷீல்டு சோதனை சென்னை அரசு பொது மருத்துவ மனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் கண்காணிப்பாளராக பொது சுகாதாரம் மற்றும்நோய் தடுப்பு துறை இயக்குநர் செல்வவிநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனைக்கு 65 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள், ‘சென்னையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து 65 தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. அனைவரும் நலமுடன் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், தொற்று ஏற்படாத 18 வயதுக்கு மேற்பட்ட, ஆரோக்கியமானவர்கள் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு முன்வரலாம். பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்பவர்களுக்கு காப்பீடு செய்யப்படும். தடுப்பூசி போட்டுக் கொண்டு வீட்டுக்கும், வேலைக்கும் செல்லலாம். விருப்பமுள்ளவர்கள் 7806845198 என்ற எண்ணில் அல்லது covidvaccinetrialdph@gmail.com என்ற இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.