மும்பை:
டிகை கங்கனா ரனாவத் மற்றும் அவருடைய சகோதரி ரங்கோலி சண்டேல் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு நாட்கள் ஆன நிலையில் நேற்று மும்பை காவல்துறை சார்பில் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதைப் பற்றி பேசிய மும்பை துணை காவல் ஆணையர் அபிஷேக் த்ரிமுகே தெரிவித்துள்ளதாவது: இந்த மாதம் அக்டோபர் 26 ஆம் தேதி கங்கனா ரனாவத், மும்பை போலீஸ் முன்பு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவரது சகோதரியான ரங்கோலி சண்டேல் அக்டோபர் 27 ஆம் தேதி மும்பை போலீஸ் முன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மும்பை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி மீது அக்டோபர் 17ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. குடிமக்களிடம் மத உணர்வை தூண்டுதல், தேச துரோகம், மதத்தின் அடிப்படையில் பல்வேறு பிரிவினருக்கு இடையில் பகைமையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவர் செயல்பட்டதால், அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று துணை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

காஸ்டிங் டைரக்டரும் உடற்பயிற்சியாளருமான முனாவர் அலி சையீத் சகோதரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார், மேலும் காவல்துறையினரின் கூற்றுபடி சகோதரிகள் இருவரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்திய அரசியலமைப்பையும், மகாராஷ்டிரா அரசாங்கத்தின் பெயரையும் கெடுக்க முயன்றனர் என்றும், முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தி, ஹிந்து முஸ்லிம்களுக்கு இடையில் பிரிவு உண்டாக்க முயன்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.