டில்லி
இந்தியாவின் தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சையை நீக்க ஆலோசிப்பதாக ஐ சி எம் ஆர் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை முறைகள் இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்கு மருந்தாக தற்போது ஹைட்ராக்சி குளோரோகுவின் மற்றும் ரெம்டெசிவிர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா வந்து குணமடைந்தோரிடம் இருந்து பிளாஸ்மா எடுக்கப்பட்டு அதை பாதிக்கப்பட்டோர் உடலில் செலுத்தும் பிளாஸ்மா சிகிச்சை முறையும் நடைமுறையில் உள்ளது. இவை அனைத்தும் சோதனை அடிப்படையில் உள்ளன.
இந்நிலையில் நேற்று ஐ சி எம் ஆர் (இந்திய மருத்துவ ஆய்வுக் குழு) துணை மேலாளர் பலராம் பார்கவா ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், “கொரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மற்றும் ஹைட்ராக்சி குளோரோகுவின் மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளின் சிகிச்சை விவரங்கள் உலக சுகாதார மையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றை ஆராய்கையில் இந்த மருந்துகள் எதிர்பார்த்த அளவு பலன் அளிக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இதைப் போல் இன்ஃபுளுயன்ஸா தடுப்பூசியும் கொரோனாவை தடுக்கவில்லை. பிளாஸ்மா சிகிச்சை குறித்து பல ஆய்வுகள் நடந்துள்ளன. இது எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை. எனவே தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையிலிருந்து நீக்கிவிடக் குழு ஆலோசித்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஆண்டி பாடிகள் உருவாகி மீண்டும் தொற்று ஏற்படுவதில்லை. ஆனால் மேலும் ஐந்து மாதங்களில் இந்த ஆண்டி பாடிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. எனவே அப்போது மீண்டும் கொரோனா தாக்கலா. எனவே கொரோனாவில் இருந்து குணம் அடைந்தாலும் எப்போதும் முகக் கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடரவேண்டும்” எனக் கூறி உள்ளார்.