மும்பை

பால்கர் கும்பல் கொலை மற்றும் பாந்த்ரா புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தவறான கருத்துக்கள் கூறியதற்காக மும்பை காவல்துறை ரிபப்ளிக் டிவி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

பால்கர் கும்பல் கொலை குறித்து பிரபல செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி, பூச்தா ஹை பாரத் என ஒரு நிகழ்வு நடத்தியது.  அந்த நிகழ்ச்சியைப் பிரபல தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி நடத்தினார்.அப்போது  அவர் கூறிய சில கருத்துக்கள் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர் இடையே விரோதத்தைத் தூண்டும் வகையில் உள்ளதாகப் புகார் எழுந்தது.

சமீபத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  அப்போது மும்பை நகரின் பாந்தரா பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் நிலையம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்த நிகழ்வை ஒளிபரப்பிய போது பல விரும்பத் தகாத கருத்துக்களை அர்னாப் கூறி உள்ளார்.  இது குறித்தும் புகார் எழுந்தது.

எனவே இந்த புகார்களின் டிப்ப்டையில் மும்பை காவல்துறையினர் ஏற்கனவே அர்னாப் கோஸ்வாமி மீது குற்றப்பத்திரிகை பதிந்துள்ளனர்.  அதில் அவர் பால்கர் மற்றும் பாந்த்ரா நிகழ்வுகள் மூலம் மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையொட்டி அர்னாப் கோஸ்வாமிக்கு மும்பை காவல்துறை உதவி ஆணையர் சுதிர் ஜாம்பவ்தேகர் அனுப்பி உள்ள நோட்டிசில் அவர் நன்னடத்தைக்காக ஒரு உறுதிப் பத்திரம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.   இந்த உறுதிப்  பத்திரத்துடன் அவர் ரூ.10 லட்சம் பிணை பத்திரத்தை சமூகத்தில் நன்கு அறிந்த அர்னாபின் நன்னடத்தையைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒருவரிடம் இருந்து வாங்கி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.