இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக சோதனை முயற்சியாக நிகழாண்டின் டிசம்பா் மற்றும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டு உள்ளது.. அதன் தொடா்ச்சியாக 2022 ம் ஆண்டு மனிதனை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுதொடர்பாக, இந்திய விமானப்படையில் இருந்து 4 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் ரஷியாவில் காகரினில் உள்ள காஸ்மோனட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் முதல்கட்ட பயிற்சியை முடித்துவிட்டதாகவும், ஒடிசா மாநில விமானப்படையை சேர்ந்த கமாண்டரான நிகில் ராத் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அனைத்து பணிகளும் முடங்கி லட்சக்கணக்கானோர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இஸ்ரோவிலும் பல்வேறு மையங்களில் பணியாற்றிய 70-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகள் தொய்வடைந்துள்ளதால், பல பணிகள் தாமதமாகி வருகின்றன. அதுபோல ககன்யான் திட்டமும் தாமதமாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. தற்போதைய நிலையில், குறித்த காலத்திற்குள் திட்டத்தை செயல்படுத்த இயலாத நிலை உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.