பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாக ஆட்சிமீது பாஜகவினரே பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் நிலையில், தற்போது 3 அமைச்சர்களுக்கு திடீரென இலாகா மாற்றம் செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தன்னிடம் இருந்து சுகாதாரத் துறை பறிக்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த ஸ்ரீராமுலு நேரடியாக எடியூரப்பாவை சந்தித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டது முதலே பல்வேறு சலசலப்புகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில், எடியூரப்பாவுக்கு எதிராக செயல்பட்ட வந்த அமைச்சர் சி.டி.ரவி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரை பாஜக மேலிடம் தேசிய பொதுச் செயலாளர் பதவி வழங்கி டெல்லிக்கு அழைத்துக்கொண்டது. அதுபோல அதிருப்தியாளர்களில் ஒருவரன கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீலும் எடியூரப்பாவுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார். எடியூரப்பா மகன், மாநில அரசின் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், அவரது அமைச்சரவையில், பல அமைச்சர்கள் முதல்வரின் ஆலோசனைகளை கேட்க மறுத்து வருவதாகவும் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த சூழிலில் கொரோனா தொற்றும் பரவத் தொடங்கியதால், தடுப்பு நிர்வாக பணிகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த பணிகளை மேற்கொள்வதில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்வித் துறை மந்திரிகள் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வந்தது. இதனால், கொரோனா தடுப்பு தொடர்பான பணிகள் மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் மாநில சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு கடும் அதிருப்தி அடைந்தார்.
இதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு நிர்வாக பணிகளை மேற்கொள்ள 4 மந்திரிகள் அடங்கிய செயல்படை ஒன்று அமைக்கப்பட்டது. அதில் துணை முதல்வர் அஸ்வத் நாராயண், சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, மருத்துவ கல்வித் துறை மந்திரி சுதாகர், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் இடம் பெற்றனர். ஆனால், இந்த அணியிலும் ஒற்றுமை ஏற்படவில்லை. மருத்துவக்கல்வித் துறை மந்திரி சுதாகர்தான் அனைத்தையும் கையாள்கிறார் என்று ஸ்ரீராமுலு குறைகூறி வந்தார். அதுபோல சட்டமன்றத்திலும் கொரோனா தொடர்பான கேள்விகளுக்கு சுதாகர் தான் பதிலளித்தார். இதனால் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு மேலும் அதிருப்தியடைந்தார்.
மேலும் ஸ்ரீராமுலுவிடம் இருந்த இன்னொரு துறையான பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை முதல்மந்திரி எடியூரப்பா தன்வசம் எடுத்துக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பு வெளியானதும் மந்திரி ராமுலு தன்னிடம் இருந்த 2 துறை பறிக்கப்பட்டது மற்றும் தனக்கு சமூகநலத்துறை ஒதுக்கியதற்கும் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே எடியூரப்பாவை சந்தித்து, தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. திடீரென அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடியூரப்பாவுக்கு எதிராக அமைச்சர் ஸ்ரீராமுலு போர்க்கொடி தூக்கி உள்ளது, ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.