டில்லி
கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்குச் செப்டம்பர் மாதம் சில்லறை வர்த்தக பணவீக்கம் 7.34% அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் கொரோனா பரவல் காரணமாகத் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் வர்த்தக மற்றும் தொழிலக நடவடிக்கைகள் அடியோடு நின்று போனது. அதையொட்டி பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பண வீக்கம் அதிகரித்தது. இந்தியாவில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பொருளாதார முடக்கம் குறையும் என எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் அதற்கு நேர்மாறாக கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்குச் செப்டம்பர் மாதம் சில்லறை வர்த்தக பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 7.34% அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய வருடம் செப்டம்பர் மாதம் இந்த அதிகரிப்பு 3.99% ஆக இருந்தது. இதற்காகச் சொல்லப்படும் காரணங்களை இங்குக் காண்போம்.
ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து ஆறாம் மாதமாக 8% உற்பத்தி குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த உற்பத்திக் குறைவு அனைத்து இனங்களிலும் ஏற்பட்டுள்ளது. இதற்கு முந்தைய மாதம் இந்த குறைவு 10.8% ஆக இருந்துள்ளது. இதைப் போல் வாடிக்கையாளர் விலைக் குறியீட்டு எண் ஆகஸ்ட் மாதம் 6.69% ஆகியது. இதுவும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 3.39% ஆக இருந்தது.
மானாவாரி பயிர் அறுவடையினால் முக்கிய காய்கறிகளான தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு விலை குறையலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது போலவே விலை குறைந்து காணப்பட்டது. அதே வேளையில் எண்ணை விதைகள், பருப்புக்களின் விலைகளில் குறைவு ஏற்படவில்லை. இதற்குக் காரணம் இறக்குமதி தீர்வை அதிகரித்தது ஆகும்.
சென்ற மாதம் நுகர்வோர் அத்தியாவசிய பொருட்கள் தேவை 10.3% மற்றும் அத்தியாவசியமற்ற சாதனங்களைப் பொறுத்த வரையில் 3.3% குறைந்துள்ளது. இதைப் போல் முதலீட்டுச் சாதனங்கள் தேவை 15.4% குறைந்துள்ளது. பொருளாதார முன்னேற்றம் சிறிது சிறிதாக அதிகரித்த போதிலும் அதற்கேற்ப சில்லறை வர்த்தகம் அதிகரிக்கவில்லை எனப் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.