திருநெல்வேலி :
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அருண் என்ற டிரைவர், ரேஷனில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் 12 ஆயிரம் கிலோ அரிசியை, கடத்தி, இருப்பு வைத்திருந்தார்.
சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார், அந்த அரிசியை பறிமுதல் செய்து, அருணை கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமீன் கேட்டு அருண் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அருண் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் “எனது கட்சிக்காரர் அப்பாவி, 32 நாட்களாக ஜெயிலில் இருக்கும் அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும்” என முறையிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நூதன நிபந்தனையுடன் அவரை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.
என்ன நிபந்தனை?
“ரேஷன் அரிசி கடத்தி கைதான அருண், மதுரையில் உள்ள மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளிக்கூடத்துக்கு 25 மூட்டை பொன்னி அரிசி வெகுமதியாக வழங்க வேண்டும்’’ என்பதே அந்த நிபந்தனை.
– பா.பாரதி