டெல்லி: பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக தேச துரோக வழக்கு தொடர வேண்டும் என சமூகவலைதளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து குறித்து சர்ச்சைகுறிய வகையில்,  பதிவு வெளியிட்ட காரணத்தால் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக தேச துரோக வழக்கு தொடர வேண்டும் என அகில இந்திய வர்த்தக சபை (GAIT) வலியுறுதி வருகிறது.

ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னோடியாக உள்ள பிளிப்கார்ட் நிறுவனம், இந்த கொரோனா பொதுமுடக்கம் காலத்திலும் கோடிகளை குவித்து வருகிறது. தற்போது தீபாவளியை முன்னிட்டு பண்டிகை கால சிறப்பு விற்பனைகளை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில்,  நாகாலாந்தில் பிளிப்கார்ட் நிறுவனம் சேவைகளை மேற்கொள்கிறதா என ஒரு வாடிக்கையாளர்  பிளிப்கார்ட் டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதில் அளித்த பிளிப் கார்ட்,   இந்தியாவிற்கு வெளியே சேவை புரிவதில்லை என  பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை கிளப்ப,  நெட்டிசனக்ள பிளிப்கார்ட் நிறுவனத்தை விமர்சித்துவருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த அகில இந்திய வர்த்தக சபை,  பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக தேச துரோக வழக்கு தொடர வேண்டும் என மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய அகில இந்திய வர்த்தக சபையின் தேசியச் செயலாளர் பிரவின் கந்தேல்வால், “பிளிப் கார்டின் செயலை, என்னால் நம்பமுடியவில்லை. அதிர்ச்சி அளிக்கிறது. நாகாலாந்தை இந்தியாவின் ஒரு அங்கம் இல்லை என பிளிப்கார்ட் தெரிவி்த்திருப்பது அம்மாநில மக்களின் மனதை மட்டும் புண்படுத்தாமல் ஒட்டு மொத்த இந்தியர்களின் மனதையும் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எடுத்துச் செல்வோம். சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டிருந்தாலும், பிளிப்கார்ட் நிறுவனத்தை மன்னிக்க முடியாது. இந்தியாவில் இருந்து கொண்டு, நாட்டின் ஒரு மாநிலத்தை வெளிநாடு எனச் சொல்வது மன்னிக்க முடியாத குற்றம். சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.