சென்னை: வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளதால், தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்று அகில இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடற்கரையை நாளை  கடக்கும் என்று தெரிகிறது. அப்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் வரும் 14ல் வடக்கு அந்தமான் கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக தமிழகத்தின் பாம்பன், கடலூர், நாகை துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.