சென்னை: அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முடிவை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, செமஸ்டரில் அரியர் தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
எம்பிபிஎஸ் மாணவர்கள் தவிர மற்ற பட்டப்படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு தெரிவித்தது. அரசின் இந்த அறிவிப்புக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில், சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள சட்டக் கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளர் ஆபிரஹாம் அறிவித்துள்ளார்.
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் விவகாரத்துக்கு அகில இந்திய பார் கவுன்சிலின் பொதுக்குழுவின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே முடிவு எடுக்கப்பட உள்ளதால், தேர்ச்சி முடிவை நிறுத்தி வைப்பதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.