டெல்லி: ஹத்ராஸ் பாலியல் சம்பவத்தை குறிப்பிட்டு, உத்தரபிரதேச அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார்.
உ.பி ஹத்ராஸ் பாலியல் படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி பெரும் போராட்டங்களை முன் எடுத்தது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். கடுமையான போராட்டங்களுக்கு பிறகே யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசு அனுமதி அளித்தது.
இந் நிலையில், பெரும்பாலான இந்தியர்கள் தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை மனிதர்களாக கருதுவதில்லை என ஹத்ராஸ் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ராகுல் காந்தி உ.பி. அரசை குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள் மனிதர்களாக கருதுவதே இல்லை. இது வெட்கப்பட வேண்டிய உண்மை.
ஹத்ராஸ் பெண்ணையும், மனிதராக கருதாததால் தான், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என முதல்வரும், காவல்துறையினரும் கூறுகின்றனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.