சென்னை: திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள் என வைகோவை மறைமுகமாக விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் திருமாவளவன் குறை கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தன. பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் கூட்டணி தொடர்வதாக கூறப்பட்டது. தற்போதும் கூட்டணிகள் தொடர்ந்து வருவதாகவும் கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது. அதுபோல திமுக கூட்டணியிலும் தனிச்சின்னம் தொடர்பாக சில கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக கூட்டணிக்கட்சிகளுக்கு இடையே நல்லிணக்கம் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்குவதற்கு சிலர் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். சில ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்துகின்றன. இன்னும் தேர்தலுக்குப் பல மாதங்கள் இருக்கின்ற நிலையில் இப்போதே சின்னம் குறித்த விவாதத்தை நடத்துவது திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்துகின்ற ஒரு முயற்சி.
திமுக மட்டுமல்ல அதிமுகவும் கூட நிலையான சின்னம் இல்லாத கூட்டணிக் கட்சிகளைத் தங்களுடைய சின்னத்தில் போட்டியிடச் சொல்வது வழக்கமான ஒன்றுதான். சொந்த சின்னம் இல்லாமல் சுயேச்சை சின்னங்களில் நிற்பதால் எதிர்க்கட்சி கூட்டணிக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது. அவர்கள் வெற்றிபெற வாய்ப்பாகிவிடுகிறது என்ற கவலை அவர்களுக்கு உண்டு
திமுகவோடு பாஜக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று அண்மையில் பொன். ராதாகிருஷ்னன் கூறினார். ஆகவே, அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கூட்டணி தொடராது என அவர் உணர்ந்துள்ளார். நான் தொடக்கத்தில் இருந்து சொல்லி வருகிறேன். அதிமுக, பாஜகவுடன் போகாது. பாஜக தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும். அதனை உறுதிப்படுத்தும் விதமாக பொன். ராதாகிருஷ்ணன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் என கூறினார்.