மதுரை: மதுரையில்எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, சில ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
மதுரை தோப்பூரில் ரூ 1264 கோடி திட்ட மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2018ம்ஆண்டு வெளியான து. அதைத் தொடர்ந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், கடந்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரை வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி, தோப்பூரில், சுமார் 202 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் கட்டப்படும் என்றும், 48 மாதங்களில் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த அறிவிப்புகள் அனைத்து வெற்றி அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன. மருத்துவமனை அமைப்பதற்கான எந்தவொரு பணிகளும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகத்தோடு அறிவிப்பு வெளியான பிற மாநில மருத்துவமனைகளின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்தும், மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.