டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்று வரும் டிராக்டர் பேரணியை மாநில எல்லைக்குள் அனுமதிக்க மறுத்து அடாவடி செய்து வருகிறது, அரியானா மாநில பாஜக அரசு. இதற்கு பதில் தெரிவித்துள்ள ராகுல், 5000 மணி நேரம் ஆனாலும் காத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
அலைகடலென திரண்டுள்ள தொண்டர்களுடன் மாநில எல்லையில் ராகுல்காந்தி உள்பட ஆயிரக்கணக்கானோர் காத்திருகின்றனர். காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி விவசாயிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள, விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா என 3 வேளாண்துறை தொடர்பான மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மோடி அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய வேளாண் சட்டத்திற்கு நாடு முழுவதும் விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், விவசாய சங்கங்களுடன் இணைந்து போராட்டங்கள் நடத்தி வருகிறது. மேலும், அக்டோபர் 4, 5, 6 ஆகிய 3 நாட்கள் ராகுல்காந்தி டிராக்டர் மூலம் தொடர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்து, அதனப்டி பஞ்சாபில் பேரணியை தொடங்கி, அரியானா நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.
கடைசி நாளான இன்று அரியானாவில்பேரணி முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரியான மாநில எல்லையை அடைத்து, மாநில அரசு அடாவடி செய்து வருகிறது. ராகுல் தலைமையிலான விவசாயிகள் பேரணியை மாநிலத்திற்குள் விட, மாநில பாஜக அரசு மறுத்து உள்ளது. இதனால், அரியானா மாநில எல்லையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணி நின்றுகொண்டிருக்கிறது. மாநில அரசுக்கு எதிராக விவசாயிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, அரியானா எல்லையில் உள்ள ஒரு பாலத்தில் அவர்கள் எங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். நான் நகரவில்லை, இங்கு காத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1 மணி நேரம், 5 மணி நேரம், 24 மணி நேரம், 100 மணி நேரம், 1000 மணி நேரம் அல்லது 5000 மணி நேரம் ஆனாலும் காத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.