நெட்டிசன்:

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அந்த தெருக்களில் தகரத்தால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. ஆனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிப்பது எந்த நோக்கத்திற்காக என கேள்வி எழுப்பி உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன், தனக்கு கொரோனா பாசிடிவ் என  தெரியவந்தபோது, அதுகுறித்த எந்தவொரு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி யும், தன்னை சந்திக்கவில்லை என்றும்  தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. பின்னர், ஜூன் மாதம் முதல் சிறுக சிறுக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது சுமார் 90 சதவிகிதம் அளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. இதனால் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், சென்னை உள்பட மாநிலம் மழுவதும், சோதனை முகாம்கள், காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு நோயாளிகள் கண்டறியப்பட்டனர். சமூக இடைவெளி, முகக்கவசம் அணி வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், ஒரே பகுதியில் பலருக்கு தொற்று கண்டறியப்பட்டால், அந்த தெருவைச் சேர்ந்தவர்கள் யாரும் வெளியே வர முடியாதபடியும், வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்ல முடியாத வகையிலும் தகரங்களைக் கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின்னர், தெரு முழுவதும் அடைக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, கொரோனா பாதிப்புக்குள்ளான நபரின் வீடு மற்றும் குடியுருப்புகள் மட்டும் தகரங்களால் அடைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தது. நாளடைவில் தகரம் அடுத்து கண்காணிக்கப்படுவது, கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், செப்டம்பர் முதல், தகரம் அடித்து கண்காணிக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து 3 மாத காலத்துக்கு பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் தான் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். முககவசம், சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி  கூறி வருகிறது.  தற்போது தொற்று பரவல் காரணமாக மீண்டும் சில பகுதிகளில் தகரம் அடித்து, தடுப்பு ஏற்படுத்தி கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி வருவதாக சுகாதாரத்துறை  தெரிவித்து உள்ளது.
ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன்னை எந்தவொரு மாநகராட்சி அதிகாரியோ, தமிழக சுகாதாரத்துறை அதிகாரியோ  தொடர்புகொள்ள வில்லை என்று வேதனை தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன், தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் தகரம் அடித்து தடுப்பு ஏற்படுத்துவதின் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.