ரக்பூர்

மாஃபியா ஆட்சி நடக்கும் உபி மற்றும் பீகாரைப் போல் மேற்கு வங்கம் ஆகி விட்டதாக அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறி உள்ளார்

மேற்கு வங்க மாநிலம் திதாகர் நகராட்சி உறுப்பினர் ஞாயிற்றுக் கிழமை அன்று பைக்கில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  காவல்நிலையம் முன்பு கொல்லப்பட்ட மனிஷ் சுக்லா பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார்.  இந்த கொலை ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸ் செய்தது என பாஜக குற்றம் சாட்டி வருகிறது.

இது குறித்து மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், “மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர் நாளுக்கு நாள் கெட்டு வருகிறது.   ஒரு நகராட்சி உறுப்பினர் காவல் நிலையத்துக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டது அவமானகரமான நிகழ்வாகும்.  மேற்கு வங்கமும் பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தைப் போல் மாஃபியா அட்சியின் கீழ் வந்துள்ளது.

அடுத்த வருடம் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  ஆனால் தற்போதைய நிலையில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.   கடந்த சில வருடங்களில் இம்மாநிலத்தில் சுமார் 120க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

திருணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான ஃபிர்ஹாத் ஹகீம், “பாஜக ஆளும் மாநிலங்களான உபி மற்றும் பீகார் மாநிலங்களில் மாஃபியா ஆட்சி நடைபெறுவதை திலிப் கோஷ் ஒப்புக்கொண்டது ஒரு நல்ல விஷயமாகும்.  அவர் ஒரு முறையாவது உண்மையை கூறியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.