டெல்லி: ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம் எதிரொலியாக உத்தரப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலின இளம்பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதை கண்டித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அம்மாநிலத்தில் அடிப்படை உரிமையும் மீறப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் சி.எல். ஜெயசுகின், என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்றனர். அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியது, குறிப்பிடத்தக்கது.