டெல்லி: தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை மாணாக்கர்கள் இணையதளத்தில் பார்க்கலாம். அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தவர் ஐஐடி பாம்பே மண்டலத்தை சேர்ந்த மாணவர் சிராக் பாலர், பெண்களில் முதலிடம் பிடித்தவர் கனிஷ்கா.
இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிப்பதற்கான நுழைவுத்தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜெஇஇ முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் மட்டுமே, ஐஐடி, என்ஐடி போன்ற தொழில்கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
நடப்பு கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வு கடந்த ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்து முடிந்தது. நாடு முழுவதும் 15 லட்சத்து 4 ஆயிரம் பேர் இந்த நுழைவுத் தேர்வை எழுதி இருந்தார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்கள், ஜேஇஇ. அட்வான்ஸ்டு தேர்வை கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் எழுதினர். இந்த தேர்வை நாடு முழுவதும் 1.5 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.
இதையடுத்து, இன்று ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள், jeeadv.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
இந்த தகவலை மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேவை நாடு முழுவதும் 1,50,838 மாணவர்கள் அட்வான்ஸ்டு தேர்வு எழுதிய நிலையில், 43,204 பேர் தேர்ச்சி பெற்றுள்னளர். இவர்களில் 6707 பேர் பெண்கள்.
ஐஐடி பாம்பே மண்டலத்தின் சிராக் பாலர், பொது தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் 396 மதிப்பெண்களுக்கு 352 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பெண்களில் கனிஷ்கா மிட்டல் முதலிடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய தரவரிசையில் 17வது இடத்தை பிடித்துள்ளார்.