’’நடிகை வீடு இடிக்கப்பட்டபோது  குரல் கொடுத்தோர், ராகுல் மீதான தாக்குதலைக்  கண்டிக்காதது ஏன்?’’

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கச் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போலீசாரால் தாக்கப்பட்டார்.

இதற்கு சிவசேனா கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராத் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர்,’ தடை உத்தரவை மீறிச்சென்றதால் ராகுல் காந்தியைக் கைது செய்திருக்கலாமே தவிர, அவரது சட்டையின் காலரைப்பிடித்து இழுத்து, தரையில் தள்ளிவிட்டிருக்கக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.

‘’ராகுல் மீதான போலீஸ் தாக்குதல், ஜனநாயகம் மீதான கூட்டுப் பலாத்காரம்’’ என்று குற்றம் சாட்டியுள்ள சஞ்சய் ராத், ‘’இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.

‘’நடிகையின் வீடு மும்பை மாநகராட்சியால் இடிக்கப்பட்டபோது வானமே இடிந்து விழுந்த மாதிரி, மகாராஷ்டிர அரசைக் குறி வைத்துத் தாக்கியவர்கள் இப்போது ராகுல்காந்தி தாக்கப்பட்ட சம்பவத்துக்குக் குரல் கொடுக்காமல் மவுனம் காப்பது ஏன்?’’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பையில் நடிகை கங்கனா ரணாவத் வீடு இடிக்கப்பட்ட போது, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள், சிவசேனா கூட்டணி அரசைக்  கடுமையாக விமர்சனம் செய்திருந்தன.

-பா.பாரதி.