பிரிட்டோரியா: சர்வதேச விமான போக்குவரத்தை கடுமையான கட்டுப்பாடுகளுடன் தென் ஆப்பிரிக்கா அனுமதித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 6 மாதங்களாக பல நாடுகளும் சர்வதேச விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இந் நிலையில், தென் ஆப்பிரிக்கவின் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்தில் முதன்முதலாக ஜெர்மனியின் லூப்தான்ஸா விமானங்கள் வந்து சேர்ந்தன.
தொடர்ந்து ஜாம்பியா, கென்யா, தான்சானியா ஆகிய நாடுகளில் இருந்தும் விமானங்கள் வந்தன. கேப்டவுன், டர்பன் நகரிலும் நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கியது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அரசு கூறியிருப்பதாவது: சர்வதேச பயணிகள் தென் ஆப்பிரிக்கா வரும் முன், கண்டிப்பாக 72 மணிநேரத்துக்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழுடன் தான் பயணம் செய்ய வேண்டும்.
கொரோனா வைரஸ் பரிசோதனைச் சான்றிதழ், காப்பீடு, தனிமைப்படுத்துதலுக்கான கட்டணம் ஆகியவை கூடுதலாக செலுத்த வேண்டும். கொரோனா பாதிப்பு இருந்தால், அதற்கான சிகிச்சை கட்டணமும் செலுத்த வேண்டும். ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளில் இருந்து யாரும் தென் ஆப்பிரிக்கா வர அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.