அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி – கலியபெருமாள் கோவில்
அரியலூர் மாவட்டம் அருகே கல்லங்குறிச்சி என்னுமிடத்தில் கலியபெருமாள் கோவில் உள்ளது.
இக்கோயிலை கல்லங்குறிச்சி பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர். ஒரு தூண் பெருமாளாக வழிபடப்படுவது இக்கோயில் சிறப்பாகும்.
அரியலூரின் வடக்கே சுமார் 10 கிமீ தொலைவில் கல்லங்குறிச்சியில் கலியபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் சிறப்பாகக் கருவறையில் காணப்படுகின்ற புனிதமான கருங்கல் தூணைக் கூறலாம். அத்தூண் கருவறையில் விமானத்திற்கும் மேலாக நெடிதுயர்ந்து நிற்கின்றது. அந்தத் தூணை கம்பம் பெருமாள் என்று கூறி வழிபடுகின்றனர்.
அந்தத் தூணின் கீழ்ப்புறத்தில் அனுமான் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தூணைச் சுற்றி வரும்போது சுமார் 250 வருடங்களுக்கு முந்தைய இரு செதுக்கப்பட்ட உருவங்களைக் காணமுடியும். அந்த உருவங்களை வைத்து உள்ளூரில் இக்கோயில் அமைந்தது தொடர்பாகக் கதை கூறப்பட்டு வருகிறது.
வரதராஜப் பெருமாள் உற்சவமூர்த்தியாக உள்ளார். எண்ணற்ற பல பிரார்த்தனைகள் இவருக்குச் செலுத்தப்படுகிறது.
கலியபெருமாளுக்குக் காணிக்கையாகத் தானியங்களை உள்ளூர் மக்கள் தருகின்றனர். அவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு கிடங்கு போலக் காணப்படும் அறைகளில் தனித்தனியாக நேர்த்தியாக வைக்கப்பட்டுள்ளன.
பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இக்கோயிலுக்காக வேண்டி ஆடு மாடுகளை கழுத்தில் குறிப்பு வைத்துக் கட்டிவிடுவதைக் காணமுடிகிறது.
அவ்வாறாகக் காணிக்கையாக வந்த மாடு ஆடுகளை யாரும் பிடிப்பதில்லை.
அந்த கால்நடைகளை மிகவும் மரியாதையோடு நடத்துகிறார்கள்.
கலியபெருமாள் கோயில் என்ற குறிப்பு கழுத்தில் தொங்கினால் அந்த கால்நடைகள் தொலைந்து போவதில்லை என்று உள்ளூரில் கூறுகின்றனர்