அருள்மிகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில், திருச்சித்திரக்கூடம், சிதம்பரம்.
108 வைணவ திவ்ய தேசங்களில் 41-வது திவ்ய தேசம் திருச்சித்திரக்கூடம்.
அருள்மிகு நடராசப் பெருமானின் திருக்கோயிலினுள்ளேயே அமைந்துள்ள வைணவத் திருத்தலம் திருச்சித்திரக்கூடம்.
பெருமாள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் போக ரெங்கநாதராக அருள்பாலிக்கும் திருத்தலம் திருச்சித்திரக்கூடம்.
மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் தான் மற்ற திருத்தலங்களில் அருள்பாலிப்பார். ஆனால், பஞ்சபூதத் திருத்தலங்களில் ஆகாயத் திருத்தலமான சிதம்பரத்தில் பிரம்மா நின்ற திருக்கோலத்தில் ஆகாயத்தைப் பார்த்தவாறு அருள்பாலிக்கும் சிறப்பு வாய்ந்த திவ்ய தேசம் திருச்சித்திரக்கூடம்.
கடலில் மூழ்கிக் கிடந்த பெருமாளை இராமானுஜர் பெருமுயற்சி எடுத்து வெளிக்கொணர்ந்து பிரதிஷ்டை செய்த திவ்ய தேசம் திருச்சித்திரக்கூடம்.
ஆதியில் தில்லை வாழ் அந்தணர்களே பெருமாளுக்கும் பூஜைகளைச் செய்து வந்தனர். 1539-ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயரின் சகோதரர் அச்சுதராயர், பட்டாச்சாரியர்களை நியமித்து வைகாநச ஆகமப்படி (Vyganasa Aagamam) பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்த திவ்ய தேசம் திருச்சித்திரக்கூடம்.
பெருமாள் சன்னதிக்கு முன்புள்ள மண்டபத்தில் நின்று, அருள்மிகு நடராஜர், அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள், அருள்மிகு பிரம்மா ஆகியோரை ஒருங்கே தரிசிக்கும் வாய்ப்புள்ள ஒரே திவ்யதேசம் திருச்சித்திரக்கூடம்.
குலசேகராழ்வார், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்வியதேசம் திருச்சித்திரக்கூடம்.