துபாய்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், 175 ரன்கள் என்ற அடையக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 131 ரன்கள் மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி அவ்வளவுதானா? என்ற கேள்விகளை எழுப்புகிறது இந்த தோல்வி. மேலும், தோனியின் கேப்டன்சி மற்றும் உடல்திறன் குறித்த கேள்விகளும் சேர்ந்தே எழுகின்றன.
அதுவும், டி-20 ஆட்டத்திற்கு லாயக்கே இல்லாத முரளி விஜயை அணியில் சேர்த்திருப்பது கடும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. இன்றைய ஆட்டத்தை ஏதோ டெஸ்ட் போட்டி போன்றே ஆடினார்கள் சென்னை வீரர்கள்.
முரளி விஜய் 15 பந்துகளில் 10 ரன்களையும், ஷேன் வாட்சன் 16 பந்துகளில் 14 ரன்களையும், ருதுராஜ் 10 பந்துகளில் 5 ரன்களையும் அடித்தனர் என்பதே இதற்கு சாட்சி.
அந்த அணியின் சார்பில் ஷேன் வாட்சன் மட்டுமே ஒரேயொரு சிக்ஸ் அடித்தார். மற்றபடி, தோனி உட்பட அனைவருக்குமே சிக்ஸர் மறந்துவிட்டது போலவே ஆடினர். ஆகமொத்தத்தில், சென்னை அணி, ஏதோ பெயருக்குத்தான் இந்த ஆட்டத்தை ஆடியது.
டெல்லி அணி சார்பில், ரபாடா 3 விக்கெட்டுகளையும், நார்ட்ஜே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.