மதுரை: ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தமுருகன் என்பவர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில், நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், மாநிலத்தின் தலைநகரத்தோடு முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக இருந்த நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டன. சாலையின் தரத்தை மேம்படுத்தவும், பாரமரிக்கவும் போதிய நிதி இல்லாததால், தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் ஒப்பந்தம் செய்து தேசிய நெடுஞ்சாலைக்காண பணிகள் நடந்தன. இதற்காக ஆங்காங்கே சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி முதல் வாரணாசி வரையிலான நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது சாலைகளின் இருபுறமும் இருந்த சுமார் 1 லட்சத்து 78 ஆயிரம் மரங்கள் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் வெட்டப்பட்டன. இதற்காக சுமார் 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்திருக்க வேண்டும். ஆனால் பெயரளவில் மரக்கன்றுகளை நட்டதோடு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் பணிகளை முடித்துக் கொண்டனர். வெட்டிய மரங்களுக்கு ஈடாக புதிய மரக்கன்றுகளை நடவில்லை என்று குற்றம் சாட்டியிருந்ததுடன், தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறமும் குறிப்பிட்ட காலத்திற்குள் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வில் நடைபெற்றது. அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில், வனத்துறை மூலம் ஒப்பந்தம் செய்து மரக்கன்று நடும் பணிகள் நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மரங்கள் வெட்டப்படுவதால், ‘சுற்றுச்சூழல் மிகவும் பாதித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சாலை விரிவாக்கத்தின் போது ஒரு மரம் வெட்டப்பட்டால், ஈடாக 10 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். அப்படி செய்ய முடியாவிட்டால், மரங்களை ஏன் வெட்ட வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,
சென்னை-மதுரை இடையே சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய இயக்குநர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.