சென்னை: இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் , அதற்கு ஆவன செய்ய வேண்டும் என பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, இந்தியக் கலாசாரத்தின் துவக்கம் மற்றும் பரிணாமம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட ஒரு குழு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. மத்திய கலாச்சாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் எழுத்து மூலம் அளித்த பதிலில், தற்காலத்திலிருந்து 12,000 வருடங்களுக்கு முன்பு வரையிலான இந்தியக் கலாசாரம் குறித்தும் அதன் துவக்கம் குறித்தும் ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 16 பேரைக் கொண்ட அந்த நிபுணர் குழுவில், இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் இணை இயக்குநர் ஜெனரல்கள் கே.என். தீக்ஷித், ஆர்.எஸ். பிஷ்ட், தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநர் ஜெனரல்கள் பி.ஆர். மாணி, ஜவஹர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் சந்தோஷ் சுக்லா, லால் பகதூர் சாஸ்திரி, தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரமேஷ் குமார் பாண்டே, அதே பல்கலைக்கழகத்தின் வேந்தர் முகுந்த்கம் ஷர்மா, விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த மக்கன்லால், இந்தியப் புவியியல் சர்வேயின் முன்னாள் கூடுதல் இயக்குனர் ஜெனரல், ஜி.என். ஸ்ரீவத்ஸவா, தேசிய சமஸ்கிருத சன்ஸ்தானின் துணை வேந்தர் பி.என். சாஸ்திரி, தில்லி பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் தலைவர் பி.சி. சர்மா, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் டீன் கே.கே. மிஸ்ரா, தில்லி பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறையைச் சேர்ந்த பல்ராம் சுக்லா, கனடாவைச் சேர்ந்த ஆசாத் கௌசிக், உலக பிராமணர் ஃபெடரேஷனின் தலைவர் எம்.ஆர். ஷர்மா, கலாசாரத் துறையின் பிரதிநிதி, ஆர்க்கியாலஜிகல் சர்வேயின் பிரதிநிதி என மொத்தம் 16 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவில் தமிழகம் உள்பட தென்னியாவைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்பட தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், தமிழ் அறிஞர்களையும் இந்த குழுவில் இடம்பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அவரது கடிதத்தில், “மத்திய அரசின் கலாசார ஆய்வுக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நிபுணர்களும் இடம்பெற வேண்டும். மத்திய அரசு அமைத்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெறாதது வியப்பளிக்கிறது”
இது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. கடந்த ஆண்டு நீங்கள் மகாபலிபுரம் வந்த போது வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னங்களை பார்வையிட்டீர்கள். தமிழர் கலாச்சாரமும், தமிழ் மொழியும் இல்லாவிட்டால் இந்திய வரலாறு முழுமையடையாது. எனவே 16 பேர் கொண்ட குழுவில் தமிழ் அறிஞர்களை இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்”
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.