டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம் உள்பட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 லட்சத்து 62 ஆயிரத்து 663 ஆக அதிகரித்து உள்ளது. ஒரே நாளில் 1,053 பலியானதை தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு மொத்த பலி எண்ணிக்கை 88 ஆயிரத்து 935 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக நிகழ்ந்த 1053 பலி எண்ணிக்கையில், மராட்டியத்தில் 344 பேரும், கர்நாடகாவில் 122 பேரும், உத்தபிரதேசத்தில் 88 பேரும், மேற்கு வங்காளத்தில் 76 பேரும், தமிழகத்தில் 60 பேரும், ஆந்திராவில் 51 பேரும், பஞ்சாபில் 47 பேரும், மத்திய பிரதேசத்தில் 37 பேரும் டெல்லியில் 32 பேரும் இறந்துள்ளனர்.
இந்த நிலையில், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழகம், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்கள் மொத்தமுள்ள பாதிப்பில் 65.5 சதவீதத்தினரையும், 77 சதவீத மரணங்களையும் கொண்டிருக்கின்றன. சிகிச்சை பெறும் நோயாளிகளில் 63 சதவீதத்தினரும் இந்த 7 மாநிலங்களைச் சேர்ந்தவர்களே.
இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்த 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்வார் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.