குஜராத் தேர்தல்  பிரச்சாரத்தில் கங்கனா ரணாவத்…

இந்தி நடிகர் சுஷாந்த் .சிங் ராஜ்புத் தற்கொலை சம்பவம் குறித்து, நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்து  சர்ச்சையை  ஏற்படுத்தியது.

இந்தி சினிமாவில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் போதை மருந்து பயன்படுத்துவதாகப் புகார் கூறிய கங்கனா. மகாராஷ்டிர மாநில அரசையும் சகட்டு மேனிக்கு விமர்சித்தார்.

இதனால் மத்திய போலீஸ் பாதுகாப்புடன், அவர் மும்பைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவானது.

சில தினங்களுக்கு முன்னர் கங்கனா, மும்பை வந்த போது  அவரை இந்தியக் குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அதால்வே சந்தித்துப் பேசினார்.

கங்கனாவுக்கு, தனது கட்சியின் ஆதரவை தெரிவித்த அதால்வே, அரசியலுக்கு வருமாறு கங்கனாவுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால் அதனை ஏற்க கங்கனா மறுத்து விட்டார்.

மும்பையில் உள்ள கங்கனாவின் இல்லத்தில் அவரை அதால்வே சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை , குஜராத் மாநில குடியரசு கட்சி தொண்டர்கள், தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அங்குள்ள வதோதரா மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், அதால்வே- கங்கனா சந்தித்துப் பேசும் புகைப்படத்தைக் குடியரசு கட்சியினர், தங்கள் தேர்தல் போஸ்டர்களில்  அச்சிட்டு நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

’’இது போன்ற சுவரொட்டிகளைக் குஜராத் முழுவதும் ஒட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளோம்’’ என வதோதரா மாவட்ட குடியரசு கட்சியின் தலைவர் ராஜேஷ்கோயல் தெரிவித்துள்ளார்.

-பா.பாரதி.