நைமிசாரண்யம்.
ஶ்ரீ ஹரிலட்சுமித் தாயார் ஸமேத ஸ்ரீ தேவராஜப் பெருமாள் {ஶ்ரீஹரி} திருக்கோவில் , நைமிசாரண்ய திவ்யதேசம், சீதாப்பூர் மாவட்டம், உத்ரப்ரதேசம்.
நைமிசாரண்யம் என்பது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்ரப் ப்ரதேசம் மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து எழுபது கி. மி., தொலைவில் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ஸ்தல வரலாறு :-
ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் குலபதி சௌகனர் தலைமையில் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்ர வேள்வியைச் செய்ய விரும்பினர்.
அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர்.
பிரம்மன் ஒரு தர்ப்பை புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்யச் சிறந்த இடம் என்று தெரிவித்தார்.
இந்த பாரத தேசத்தில் கோமதி ஆற்றங்கரையில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது.
இவ்விடமே தமது சத்ர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர்.
நேமி என்ற சொல்லுக்குச் சக்கரம் அல்லது சக்ரவளையம் என்பது பொருள்.
நேமி சார்ந்த ஆரண்யம்(காடு) ஆனதால் நேமிச ஆரண்யமாகி நைமிசாரணியம் ஆயிற்று.
வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை திருமாலுக்கு வழங்க எண்ணினர்.
அவ்விதமே திருமால் குறித்துத் தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே தோன்றி அவிர்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கள் எல்லாருக்கும் அருள் புரிந்தார் என்பது வரலாறு.
இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய வடிவில் கொண்டு (காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர்.
எம்பெருமான், தாயார் :-
இத்தலத்தில் எம்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவராஜன் (ஶ்ரீஹரி)என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.
தாயாரின் பெயர் ஶ்ரீஹரிலக்ஷமி என்பதாகும்.
இத்தலத்தின் தீர்த்தம் :- சக்ர தீர்த்தம் மற்றும் கோமுகி நதி.
விமானம் :- ஸ்ரீஹரி விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது.
கோயில் அமைவிடம் :- லக்னோ ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 88 கி.மீ தொலைவில், கோமதி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது.
ஸ்தல சிறப்புக்கள் :-
இயற்கை வழிபாட்டு முறைப்படி எம்பெருமானை வன உருவத்தில் வழிபடும் முறை 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே காணப்படுகிறது. இறைவனுக்கு சக்ரநாராயணன் என்றொரு பெயரும் உண்டு.
இந்த சக்ர நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் ராமர், லக்ஷமணர், சீதை முதலியோருக்கும் கோவில்கள் உண்டு.
சிறப்பாக இங்கு விநாயகருக்கும் தனி சன்னதி காணப்படுகிறது.
இது வேறெந்த வைஷ்ணவ ஸ்தலத்திலும் இல்லாததாகும்.
இங்கிருந்து கோமுகி {கோமடி} நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேத வியாசருக்கும் ஆலயம் உள்ளது.
வியாச முனிவரும், சுக முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்கள் என்பர்.
இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள அனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் ராம, லக்ஷமணர்களை தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள அனுமார் உள்ளார்.
திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.
சூத பௌராணிகர் உக்ரஸ்ரவஸ் என்ற சௌதி, குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு, மஹாபாரதம் மற்றும் புராணங்கள் எடுத்துக் கூறினார்.
தங்கும் வசதி :-
இத்திருத்தலத்தில் அகோபில மடமும், ஶ்ரீ ராமானுஜ மடமும் தங்க வசதியளிக்கின்றன