வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை
அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாய அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை
சிவபெருமான் வீரச் செயல் புரிந்த அட்ட வீரட்ட திருத்தலங்களில் மூன்றாவது திருத்தலம் திருவதிகை.
முப்புரத்தை எரித்து சிவபெருமான் தேவர்களைக் காப்பாற்றி அருளிய திருத்தலம் திருவதிகை.
இராமாயண காலத்திற்கும் முந்தையது என்பதைத் திருமூலரின் “முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே” என்னும் பாடல் வரிகளிலிருந்து அறியலாம்.
இராஜ இராஜ சோழன் தஞ்சை பெரிய கோயில் கோபுரம் கட்ட முன்மாதிரியாக அமைந்த மூலவர் விமானத்தைக் கொண்ட திருத்தலம் திருவதிகை.
சமண சமயத்தைச் சார்ந்து, திருப்பாதிரிப்புலியூரில் தங்கி சமண சமயத்திற்குத் தொண்டாற்றி வந்த அப்பருக்கு (திருநாவுக்கரசர்) ஏற்பட்ட சூலை நோயை நீக்கி, அவர் சைவ சமயம் திரும்பி, முதல் தேவாரப் பாடலைப் பாடியருளச் செய்த திருத்தலம் திருவதிகை.
அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரம் பாடப் பெற்ற திருத்தலம். அருணகிரிநாதர், வள்ளலார், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆகியோராலும் பாடப்பெற்ற திருத்தலம்.
சுவாமி, அம்மன் திருமணக் கோலத்தில் அருள்பாலிப்பதால், திருமணத் தடைகள் நீங்க இங்குப் பிரார்த்திப்பர்.
சிவபெருமான் தனது சூலாயுதத்தால் உண்டாக்கிய சூல தீர்த்தமும், திருமால் தனது சக்கராயுதத்தால் உண்டாக்கிய சக்கர தீர்த்தமும் (திருக்குளம்), தென்பால் பாயும் கெடிலம் நதியும் தீர்த்தங்களாகும்.
சரக்கொன்றை தல விருட்சம்.