சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 10%க்கும் கீழ் குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். மேலும், ஊரடங்கு தளர்வு காரணமாக கொரோனா தொற்று மேலும் பரவி உள்ளதாக என்பது, அடுத்த வாரங்களில்தான் வெளியே தெரியும் என்றும் கூறி உள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு ருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவர்களை கண்காணிக்க புதிதாக தொடங்கப்பட்டுள்ள, 120 படுக்கைகள் கொண்ட கொரோனா சஸ்பெக்ட் வார்டு என்ற புதிய ‘வார்டை’ சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியர், கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட நபருக்கு நுரையீரல் பாதிப்போ அல்லது கொரோனா அறிகுறிகள் இருந்தாலோ அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 120 படுக்கை வசதிகள் உள்ள புதிய ‘கோவிட் சஸ்பெக்ட் வார்டு’ தொடங்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சென்னையில்தான் அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் தொற்று பாதிப்பு 7 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதுபோல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்து வருகிறது என்றார்.
தற்போது, ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு 2 வாரங்கள்தான் முடிந்துள்ளது. இதன் காரணமாக தொற்று பரவல் அதிகரித்துள்ளதா என்பது குறித்து, அடுத்த வாரத்துக்கு பின்னர்தான் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.