சென்னை:
செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அஇஅதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில் ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இந்த செயற்குழுக் கூட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 2021ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளுக்கிடையே நிலவி வரும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.முன்னதாக சென்னையில் அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் அஇஅதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை நிலவி வந்த நிலையில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தல் களம் குறித்தும், பெங்களுரூ சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலையானால் அதனை ஒட்டிய அரசியல் நிலை, அஇஅதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஆகியவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.