சென்னை: கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக ஓமந்தூரார், வேலூர் சிஎம்சி ஆகிய மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா காலத்தில், மருத்துவமனைகளில் முதன்முதலில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன. மருத்துவர்களின் சிறப்பான சேவை, பணியாளர்களின் பாதுகாப்பு என அனைத்திலும் அரசு மருத்துவமனைகள் சிறப்பான பணியை செய்து வருகின்றன. இத்தகைய சிறப்பான அர்பணிப்புமிக்க மருத்துவமனைகளில் ஓமந்தூரார் மருத்துவமனை குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது.
கொரோனா சிகிச்சையில் சிறப்பாக தேர்வு செய்யப்படும் விருதுகளுக்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவமனைகளிலிருந்து 100க்கும் அதிகமான விண்ணப்பங்கள் CAHOல் பெறப்பட்டிருந்தன. அதில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, சென்னை மற்றும் கிறித்துவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (சிஎம்சி) ஆகிய மருத்துவமனைகள் முதன்மையான விருதுகளை பெற்றுள்ளன.
இந்நிகழ்வில் வெளிநாடுகளிலிருந்து 7 மருத்துவமனைகள் உட்பட, 100க்கும் அதிகமான மருத்துவமனைகள் பங்கேற்றன. மிகப்பெரிய மருத்துவமனைகள் வகையினத்தில் சிஎம்சி வேலூர் (தமிழ்நாடு) மற்றும் அம்ரிதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (கொச்சி) ஆகியவை முதல் மற்றும் இரண்டாவது பரிசுகளை முறையே வென்றன. ராமய்யா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (பெங்களுரு) மற்றும் எனிபோயா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (மங்களூர்) ஆகியவற்றிற்கு ஊக்குவிப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
பெரிய மருத்துவமனைகள் வகையினத்தில் (300-600 படுக்கை வசதிகள்) ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி (சென்னை) மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனை, மொகாலி (பஞ்சாப்) முதல் மற்றும் 2ம் பரிசுகளை வென்றன. இவ்வகையினத்தில் பாய் ஜெர்பாய் வாடியா குழந்தைகள் மருத்துவமனை (மும்பை) மற்றும் தவாம் மருத்துவமனை (அபுதாபி), ஊக்குவிப்பு விருதுகளை வென்றன.
நடுத்தர அளவு மருத்துவமனைகள் வகையினத்தில் (100-300 படுக்கைகள்) ஆஸ்டர் சனாத் மருத்துவமனை (ரியாத்) மற்றும் விபத்து மற்றும் அவசரநிலை சிகிச்சை மையம் (பெங்களுரு மருத்துவக்கல்லூரி) ஆகியவை முறையே முதல் இரண்டு பரிசுகளை வென்ற நிலையில் ஆனந்த் சர்ஜிக்கல் ஹாஸ்பிட்டல் (அகமதாபாத் மற்றும் கோஹினூர் ஹாஸ்பிட்டல்ஸ் (மும்பை) ஊக்குவிப்பு விருதுகளைப் பெற்றன.