சென்னை: தமிழக சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், உரிமைக்குழு நோட்டீசை எதிர்த்து, ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை தமிழக சட்டப்பேரவைக்குள் எடுத்துச் சென்றது தொடர்பாக சட்டமன்ற உரிமைக்குழு விளக்கம்கேட்டு மீண்டும் அனுப்பிய நோட்டீசுக்கு தடை கேட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 18 எம்எல்ஏக்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுமீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அவைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரத்தில், உரிமை மீறல் தொடர்பாக உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ்க்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு, சமீபத்தில், உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால், அதை ரத்து செய்வதாகவும், மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று தெரிவித் திருந்தது.
இதையடுத்து, சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பேரவை உரிமை மீறல் குழு கூட்டம் கூடி, மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்து உள்ளது.