டெல்லி: தென் மாநிலங்களில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 122 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடி உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வரலாற்றில் முதல் முறையாக முகக்கவசம், சமூக இடைவெளி உள்பட வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூட்டத்தொடர் நடைபெற்றது.

இந் நிலையில், தென் இந்தியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து மாநிலங்களவையில்  கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த  உள் துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி பேசியதாவது:

கேரளா, ஆந்திரா,தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 122 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலனோர் கேரளாவை சேர்ந்தவர்கள். ஐ.எஸ் பயங்கரவாதிகள் செயல்பாடுகள் கேரளாவில் தான் அதிகளவில் இருப்பதாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

தென் இந்தியாவை தவிர மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் இருக்கிறது. நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் தொடர்பாக என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.