டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம், அன்றைய தினம் முன்னாள் துணை பிரதமர் அத்வானி, முரளி மனோகர் ஜோதி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.
1992 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந்தேதி உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த அகமதபாத் நீதிமன்றம் , வழக்கில் இருந்து, பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்டோரை விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையிடு செய்தது. அதையடுத்து, லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரித்து தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அத்வானி, ஜோஷி போன்றோரிடம் காணொளி காட்சி மூலம் விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து, விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 30ந்தேதி (செப்டம்பர்) பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நிதிபதி, சுரேந்திர குமார் யாதவ் கூறியுள்ளார்.
அன்றைய தினம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்வானி, முரளி மனோகா் ஜோஷி உள்ளிட்ட 32 பேரும் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.