டில்லி

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட இனத்தவரைத் தாக்குவது நயவஞ்சகமான வெறிச்செயல் என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது.

சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்வுகளில் இஸ்லாமியரைத் தாக்கி கருத்து தெரிவிப்பது அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.  அவ்வகையில் தனியார் தொலைக்காட்சியான சுதர்சன் நியூஸ் டிவியில் ‘பிந்தாஸ் போல்’ என்னும் நிகழ்ச்சி மீது புகார் எழுந்தது.  இந்த நிகழ்வில் இன்று மற்றும் நாளை ஒளிபரப்பாகும் பகுதிகளில் இஸ்லாமியர்கள் அரசு அதிகாரிகள் ஆவது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சந்திரசூட், மற்றும் ஜோசப் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.  அப்போது இந்த இரு பகுதிகளையும் ஒளிபரப்ப அமர்வு தடை விதித்தது.   இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் இஸ்லாமியர்களைச் சிறுமைப்படுத்துவதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தது.  அத்துடன் இது போலக் குறிப்பிட்ட இனத்தவரைத் தவறாகச் சித்தரிப்பதை கருத்துச் சுதந்திரமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தது.

தொலைக்காட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷ்யாம் திவான் இடம் நீதிபதி சந்திரசூட், “உங்கள் கட்சிக்காரர் தனது உரிமையை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.  இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இஸ்லாமிய இனத்தவரை மிகவும் கேவலமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.  இது நயவஞ்சகமான வெறிச் செயல் ஆகும்.  இது போல நடவடிக்கைகளை தொலைக்காட்சிகள் கை விட வேண்டும்.

தொலைக்காட்சிகளுக்கு தற்போது பெரிய அளவில் வரவேற்பு உள்ளதால் ஒரு குறிப்பிட்ட இனத்தவரைத் தாக்கி நிகழ்ச்சிகள் நடத்துவது நாட்டில் இனக்கலவரத்தை உண்டாக்கக் கூடும்,   ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் மதிப்பைப் பாதித்து அவர்களை கேவலம் செய்வதை எப்படிக் கட்டுப்படுத்துவது?  அரசால் இதைச் செய்யமுடியாது.   இந்த நிகழ்வில் வெறியுடன் ஒரு இனத்தவரை அரசு அதிகாரிகள் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்தார்

மற்றொரு நீதிபதி ஜோசப், “நான் இந்த தொலைக்காட்சியின் உரிமையாளர் யார் என்பதையும் கவனிக்க வேண்டும்.   இது குறித்த அனைத்து விவரங்களையும் இணையத்தில் வெளியிட வேண்டும்.  அத்துடன் இந்த நிறுவனத்தின் வருமானம் குறித்த கணக்குகள் வெளியிடப்பட்டு இதில் அரசு விளம்பர வருமானம் எவ்வளவு என்பதைக் கணக்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, “மின் ஊடகத்தில் வெளி கட்டுப்பாடு மிகவும் தவறானது.  பத்திரிகையாளர் சுதந்திரம் மிகவும் முக்கியமானதாகும்.   ஜனநாயக நாட்டில் பத்திரிகைகளைக் கட்டுப்படுத்துவது கொடுமையான செயலாகும். மின்னணு ஊடகத்துக்கு நேரான மற்றொரு ஊடகத்தில் இதே கருத்தை ஒரு மடிக்கணினி மூலம் ஒரு பத்திரிகையாளர் பலரிடம் கொண்டு போய்  சேர்க்க முடியும்.  பல ஆன்லைன் ஊடகங்களில் உரிமையாளர்கள் குறித்த தகவல்கள் அளிக்கப்படுவதில்லை” எனத் தெரிவித்தார்.

இதற்கு அமர்வு” நாங்கள் ஒரு ஊடகத்தை ஊக்குவித்து மற்றொரு ஊடகத்தைத் தாழ்த்தவில்லை.  நியாயமான விமர்சனம் வரும் போது அதை அனைவரும் வரவேற்பார்கள்,  பத்திரிகையாளர்களும் சில கொள்கைகளுடன் செயல்பட வேண்டும்.   இதற்கான வழிமுறைகளை அறிவிக்க ஐந்து வெவ்வேறு பேரை கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்” என அறிவித்து இந்த வழக்கைச் செப்டம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.