டெல்லி: கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது போன்று, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதி வேகமாக உயர்ந்து வருகிறது. மே மாதம் 50,000ஆக இருந்த குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 36 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.
நாள்தோறும், 70,000 பேர் வரை தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வருகின்றனர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்களை விட குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3.8 மடங்கு அதிகமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: குணமடைந்தவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும்.
மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். யோகாசனம், பிராணாயாமா ஆகிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சோர்வு, உடல் வலி, இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.