மதுரை மேல பொன்னகரம் பகுதியை சேர்ந்த சேதுராமன், தொழில் அதிபர் ஆவார். அங்கு மூன்று திருமண மண்டபங்கள் வைத்துள்ளார்.

ஆரம்பத்தில் அரசு சுகாதார ஆய்வாளராக இருந்த அவர், சொந்த தொழிலில் ஈடுபடும் எண்ணத்தோடு வேலையை உதறி விட்டு, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார்.

தொடக்கத்தில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளில் சிக்கிய சேதுராமனுக்கு, தோளோடு தோள் நின்று தெம்பூட்டியவர் அவரது மனைவி, பிச்சைமணி.

மாரடைப்பு காரணமாக பிச்சைமணி கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது பிரிவை சேதுராமனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

பிச்சைமணி வாழ்நாள் முழுவதும் தன்னுடன் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும் வகையில் அவருக்கு முழு உருவச்சிலையை உருவாக்கி அதனை தனது அறையில் வைத்துள்ளார், சேதுராமன்.

மதுரையை சேர்ந்த சிற்பி ஒருவர், 25 நாட்களில் இந்த சிலையை, ’’பைபரில்’ வடிவமைத்து கொடுத்துள்ளார்.
‘’ கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வணிகர், மறைந்த தனது மனைவிக்கு சிலை வடிவமைத்துள்ளதாக அறிந்தேன். அவரை பின்பற்றி என் மனைவிக்கு சிலையை உருவாக்கினேன். பிச்சைமணி மனைவி மட்டும் அல்ல. என் தோழி’’ என உருகுகிறார், சேதுராமன்.

-பா.பாரதி.