மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தனது சில்லறை வர்த்தப் பிரிவில், தோராயமாக, 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்குகளை, அமேசான்.காம் இங்க் நிறுவனத்திற்கு விற்பனை செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தாண்டில், ஏற்கனவே, முகநூல் மற்றும் கூகுள் போன்ற முதலீட்டாளர்களிடமிருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியிருந்தது. இந்நிலையில், ரிலையன்ஸின் சில்லறை வணிகப் பிரிவிலிருந்து 40% பங்குகளை, அமேசான் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவுசெய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம், இதுதொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அல்லது அமேசான் ஆகிய 2 நிறுவனங்கள் சார்பில் எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
டெலிகாம் துறையில், மத்திய அரசின் முழு ஆதரவோடு நன்றாக கால்பதித்தப் பிறகு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிறுவனம் தனது கவனத்தை திருப்பியுள்ளது.
தற்போதைய நிலையில், நாடு முழுவதும் அமைந்துள்ள 12000 ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக கடைகளில், மளிகைச் சாமான்கள், காய்கறிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்பட பலவிதமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.